Thursday, August 27, 2020

தற்செயல்

"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே "

இது குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள செம்புலப்பெயனீரார் இயற்றிய பாடல்
தலைவனின் கூற்றாக வரும் இப்பாடலில் , அவர் கூறுவது நம் பெற்றோர்களுக்கு இடையில்  உறவேதும் இல்லை. எனக்கும் உனக்கும் கூட எவ்வழியிலும்  முன்னறிமுகம் இல்லை .இவ்வாராயினும் நாம் இருவரும் அன்பினால் ஒன்று கூடுகிறோம், மழை நீரையும் செந்நிலத்தையும் போல. இந்த உவமைஅழகும் ஆழமும் பொருந்திய ஒன்று . மழை எங்கிருந்தோ வானத்திலிருந்து வந்து முன் பின் அறியா செந்நிலத்துடன் பிரிக்க முடியா வண்ணம் கலக்கின்றது. ஒன்றின் பண்பை மற்றோன்று உள்வாங்கி தத்தம் இயல்புகளை பரிமாறிகொள்கின்றன . இந்த பாடல் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது , அதன் உரிப்பொருள் புணர்தல் என்பதை தொல்காப்பியம் குறிக்கின்றது . அந்த வகையிலும்  இது ஒரு மிகச் சிறந்த உவமை !

இவை யாவுமே தற்செயலாக நடப்பது. தமிழர் அகத்திணை மரபில் தற்செயலுக்கு ஒரு உயர்ந்த இடம் உண்டு . களவில் மட்டும் அல்ல கலைகளிலும் தன்முயற்சியின்றி தானாக ( நம் மூலமாக) நடப்பவை தான் சிறந்த படைப்புகள் ஆகின்றன . மனிதர்கள் முழு ஒப்படைப்பில் செயல்பட்டால் இறை தன்னை பல்வேறு  அழகிய கோணங்களில் வெளிப்படுத்தும் . நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் அகந்தையை விலக்கி  அந்த தருணத்தில் ஒரு கருவியாக செயல்படவேண்டும் அவ்வளவே. 

நாளை என்னுடைய நீண்ட நாள் நண்பர் திரு கொங்குவேளிற்கு பிறந்த நாள் . அவர் ஒரு சிறந்த சதுரங்க வீரர், சர்வதேசிய மாஸ்டர் , சதுரங்க உலகில் பல சாதனைகள் படைத்தவர். இந்த தருணத்தில் என்னுடைய நினைவு 25 ஆண்டுகள் பின் நோக்கி செல்கிறது. 1995 இல் அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் மாணவராக இருந்தார் அவர். இந்திய தேசிய போட்டியில் ( நேஷனல் 'அ'  என்று அழைக்கப்படும்) பங்கேற்க தேர்வு பெற்றிருந்தார் . ஆனால் கல்லூரி நடப்பு மற்றும் தேர்வின் காரணமாக அந்த  போட்டியில் கலந்தது  கொள்ள வேண்டாம் என்று எண்ணியிருந்தார் . பின்னர் அந்த  போட்டி சென்னையிலேயே நடப்பதாக அறிவிக்கப் பட்டது. அது மட்டுமின்றி போட்டி நேரமும் தேர்வுகளுக்கு இடைஞ்சல் அளிக்காத படி முடிவாயிற்று. இதெல்லாம் தற்செயலாக நடந்ததால் மட்டுமே அவர் பங்கேற்க முனைந்தார் . அப்போதும் கூட பெரிதாக வெற்றி தோல்வியின் மீது நாட்டமில்லாமல் " நான் கல்லூரி மாணவன் , என் ஊரில் நடப்பதனால விளையாடப்போகிறேன் " என்ற மனநிலையில் தான் களமிறங்கினார் . அனைவருடைய எதிர்பார்ப்புக்கும் வியப்பூட்டும் வகையில் இறுதி( 17 வது) சுற்றுக்கு முன்னர்   அவரும் தே. வெ . பிரசாத் என்ற முன் நாள் தேசிய வாகையனும் முன் நிலையில் இருந்தனர் . தற்செயலாக அவ்விருவருமே இறுதி ஆட்டத்தில் மோதுவதாக அமைந்தது. இறுதி  சுற்றில் வெற்றி பெற்று தேசிய வாகையன் (நேஷனல் சாம்பியன்)  என்ற பட்டம் மட்டுமல்லாது சர்வதேசிய மாஸ்டர் எனும் பட்டமும் பெற்றார். 

அந்த ஆட்டத்திலிருந்து ஒரு சில தருணங்கள் படங்கள் வடிவில் :







நிறைவாக ஒரு குறளோடு முடிப்பது பொருத்தமாக இருக்கும் என்றெண்ணுகின்றேன் .

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது"


வலைதள குறிப்புகள்  :-




 









No comments:

Post a Comment